இலவச பஸ் சேவை 
ஆன்மிகம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்களுக்காக இலவச பஸ் இயக்கம்

இலவச பஸ் வசதியை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என கோவில் செயல் அலுவலர் வெங்கடேசுலு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்ரீகாளஹஸ்தி,

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் இலவச பஸ் இயக்கப்படுகிறது. அந்தப் பஸ் கைலாச சதன், கங்கா சதனில் இருந்து அதிகாலை 3 மணியில் இருந்து காலை 8 மணி வரையிலும், மாலை 5.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் இயக்கப்படுகிறது. கோவிலின் 4-வது வாயில், ரெயில் நிலையம், வரதராஜசாமி விருந்தினர் மாளிகை, அரசு பஸ் நிலையம், பக்த கண்ணப்ப சதன், 1-வது வாயில், 4-வது வாயில் மற்றும் கைலாச தனம், கங்கா சதன் விருந்தினர் மாளிகை ஆகிய பகுதிகளுக்கு இந்த பஸ் இயக்கப்படுகிறது.

அதேபோல் காலை 9 மணியில் இருந்து மதியம் 12.00 மணி வரையிலும், மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் கைலாச சதன், கங்கா சதன் முதல் 4-வது கேட், 1-வது கேட், அரசு பஸ் நிலையம், வி.எம்.சி. சர்க்கிள், பக்த கண்ணப்ப சதன், 1-வது கேட், 4-வது கேட் வரை இலவச பஸ் இயக்கப்படுகிறது.

இலவச பஸ் வசதியை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும், என கோவில் செயல் அலுவலர் வெங்கடேசுலு தெரிவித்துள்ளார்.