திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் மற்றும் சிறப்பு உற்சவங்கள் நடக்கின்றன. இது குறித்த தகவல்களையும், அட்டவணைகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் திருமலையில் அடுத்த மாதம் (நவம்பர் 2026) எந்தெந்த தேதிகளில் என்னென்ன உற்சவங்கள் நடைபெற உள்ளன என்பது தெடர்பான அட்டவணையை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி நவம்பர் 2-ந் தேதி திருமலை நம்பி உற்சவமும், 4-ந் தேதி மணவாள மாமுனிகள் உற்சவமும், 8-ந் தேதி தீபாவளி ஆஸ்தானமும் நடக்கிறது. 11-ந் தேதி திருமலை நம்பி சாத்துமுறை, 13-ந்தேதி நகுல சேவிதி, பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா, மணவாள மாமுனிகள் சாத்துமுறை, 15-ந் தேதி புஷ்பயாகத்திற்கான அங்குரார்ப்பணம், திருமங்கை ஆழ்வார் வருஷ திருநட்சத்திரம் நடக்கிறது.
16-ந் தேதி புஷ்பயாகம், அத்திரி மகரிஷி வர்ஷ திருநட்சத்திரம், பிள்ளை லோகாச்சார்ய வருஷ திருநட்சத்திரம், பொய்கை ஆழ்வார் வருஷ திருநட்சத்திரம் நடக்கிறது. 19-ம் தேதி யாக்ஞவல்கிய ஜெயந்தி நடைபெறுகிறது.
21-ந் தேதி கைசிக துவாதசி ஆஸ்தானம், சக்கர தீர்த்த முக்கொடி உற்சவம், 24-ந் தேதி கார்த்திகை தீப உற்சவம், திருமங்கை ஆழ்வார் சாத்துமுறை நடக்கிறது. நவம்பர் 25-ம் தேதி திருப்பாணாழ்வார் வருஷ திருநட்சத்திர உற்சவம் நடைபெறுகிறது.