அன்பானவர்களே; இந்த உலகத்திலே ஒரு மனிதனுடைய வாழ்க்கையை திருப்திப்படுத்துகிற பல காரியங்கள் உண்டு. ஆனால் அவை உண்மையாய் அவனை திருப்தியாக்குகிறதா என்பதுதான் கேள்விக்குறி.
ஆனால், கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுப்பதெல்லாம் மிகச்சிறந்த ஆசீர்வாதங்கள் ஆகும். அதில் எந்தவொரு குறையோ, ஒழுங்கற்ற காரியங்களோ இருக்காது.
வேதம் சொல்கிறது: 'கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும். அதனோடேகூட அவர் வேதனையை கூட்டார்'. (நீதிமொழிகள் 10:22)
இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையில் செல்வ செழிப்புகளுக்கு குறை இல்லை. ஆனால் அவற்றை சமாதானத்தோடு அனுபவிக்க முடியாமல், கண்ணீரோடும், வேதனையோடும், கவலையோடும், காணப்படுகிறார்கள். ஒருபுறம் உடல் ரீதியான, மன ரீதியான வியாதிகள், சமாதானமற்ற குடும்ப உறவுகள், கடன் சுமைகள் போன்றவை அன்றாட வாழ்க்கையை அனுபவிக்க விடாதபடி தடுக்கிறது.
வேதம் சொல்கிறது: “தேவன் ஐசுவரியத்தையும், சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அனுக்கிரகம்” (பிரசங்கி 5:19).
இது தொடர்பாக வேதாகமத்தில் இருந்து ஒரு சம்பவத்தை பார்ப்போம்.
இயேசுவின் சீடர்களாகிய பேதுரு மற்றும் சிலர் சேர்ந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றார்கள். அவர்கள் தங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தும் ஒரு மீன்கூட கிடைக்கவில்லை.
இதுபற்றி வேதம் சொல்கிறது: 'அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை' (யோவான் 21:3)
விடியற்காலமான போது இயேசு கரையிலேயே நின்றார். அவர், தம் சீடர்களைப் பார்த்து, 'சாப்பிடுவதற்கு அப்பத்துடன், மீன் ஏதாகிலும் இருக்கிறதா?' என்று கேட்டார். அவர்கள் 'இல்லை' என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, “உங்கள் படகின் வலப்புறம் வலையைப் போடுங்கள், மீன் கிடைக்கும்" என்று கூறினார். அவர்கள் கீழ்ப்படிந்தபோது, வலை நிறைய 153 பெரிய மீன்களைப் பிடித்தார்கள்.
“அவர், நீங்கள் படகின் வலதுபுறமாக வலையைப் போடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார், அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்" (யோவான் 21:6).
அவர்கள் கடலில் இருந்து கரைக்கு வந்தபோது, கரி நெருப்பு போடப்பட்டிருப்பதையும், மீனும், அப்பமும் தயாராக இருப்பதையும் கண்டார்கள். இயேசு அவர்களிடம், 'பிள்ளைகளே, வந்து சாப்பிடுங்கள்' என்று கூறி, அப்பத்தையும், மீனையும் எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார்.
இன்றைக்கும் நம்முடைய உண்மையான நிலை மனிதர்களுக்கு ஒருவேளை தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் இயேசுவுக்கு நம்மைப்பற்றி எல்லாமே தெரியும். அவர் எப்போதும் நம்மேல் உருக்கமாக இருக்கிறார்.
நம்முடைய வாழ்க்கையில் எல்லாமே முடிந்து போயிற்று என்பதுபோல் தோன்றினாலும், இயேசு, விசேஷித்த ஒன்றை நமக்காக ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார். அவர் உச்சிதமான கோதுமையினால் நம்மைப் போஷிக்கவும், கன் மலையின் தேனினால் திருப்தியாக்கவும் விரும்புகிறார்.
“உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்” (சங்கீதம் 81:16).
உச்சிதமான கோதுமை என்பது, நாம் எதிர்பாராத மிகச்சிறந்த ஒன்றை அவர் நமக்கு தர விரும்புகிறார். கன்மலை தேன் என்பது, எதிர்பாராத இடங்களில் இருந்து நம்மைத் தேடி வரும் நன்மைகள், உயர்வுகள் ஆகும்.
நம்மை விசாரிக்கிற இயேசுவிடத்தில் நாம் ஒவ்வொருவரும், நம்முடைய வாழ்க்கையை ஒப்படைக்கும்போது, அவர் உச்சிதமான கோதுமையினாலும், கன்மலையின் தேனினாலும் நம்மை திருப்தியாக்குவார். தேவனால் திருப்தியாகிற அனுபவமே ஒரு மனிதனின் உண்மையான, நிரந்தரமான திருப்தியாகும்.
எந்தெந்த காரியத்தில் திருப்தியற்ற நிலைமைகள் காணப்பட்டதோ, அதை மாற்றி ஒரு மதுரமான சூழ்நிலையை உருவாக்கி, ஒரு பரிபூரண திருப்தியின் வாழ்க்கையை தந்து நம்மை ஆச்சரியப்படுத்தி, அதிசயமாய் வழிநடத்தப் போகிறார். ஆமேன்.
-டாக்டர் ஒய். ஆர். மானெக்க்ஷா, நெல்லை.