திருத்தணி,
திருத்தணியில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, முருகப்பெருமானுக்கு 3 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடப்பு ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா கடந்த 10-ம் தேதி தொடங்கியது. தினமும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்கக்கசவம், திருவாபரணம், வெள்ளிக்கவசம், சந்தனகாப்பு அலங்காரம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில் கந்த சஷ்டி விழாவின் 6-வது நாளான இன்று அதிகாலை மூலவர் முருகப்பெருமான் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 3 டன் மலர்கள் அரக்கோணம் சாலையில் உள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவடி மண்டபத்தில் வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சண்முகப் பெருமானுக்கு, 3 டன் மலர்களால் புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. கந்த சஷ்டியை முன்னிட்டு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். போக்குவரத்து நெரிசலை தடுக்க மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆறுபடை வீடு தலங்களில் உள்ள பிற முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடத்தப்படும். திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான் திருத்தணி மலையில் சினம் தணிந்தார் என்பது ஐதீகம். அதனால் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.
நாளை காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.