தீர்த்த குடம், அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள் 
ஆன்மிகம்

கவுந்தப்பாடி ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவில் மாசி பொங்கல் திருவிழா

விழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் அலகு குத்தி, தீர்த்தக் குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கவுந்தப்பாடி,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவிலில் மாசி மாத பொங்கல் திருவிழா கடந்த மாதம் 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 23ம் தேதி இரவு பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்து, 25ம் தேதி கம்பம் நடப்பட்டது. 27 ம் தேதி பூவாடு வைத்து சிறுவர், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் கம்பத்தாட்டம் ஆடினார்கள்.

நேற்று 5ம் தேதி அதிகாலை பெருந்தலையூர் வாணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு, கவுந்தப்பாடி ஆப்பக்கூடல் ரோடு கால்நடை மருத்துவமனை அருகே உள்ள அம்மை அழைக்கும் ஆலயத்தில் வைக்கப்பட்டு, அம்மை அழைப்பு பூஜை நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் அங்கிருந்து தீர்த்தக்குடம், அக்கினி கும்பம் எடுத்தும் அலகு குத்தியும் ஊர்வலமாக புறப்பட்டனர். தாரை, தப்பட்டை, பம்பை வாத்தியங்கள் உடன் புறப்பட்ட அவர்கள் ஆஸ்பத்திரி ரோடு, மூன்று ரோடு, கடைவீதி, நால்ரோடு, கோபி ரோடு வழியாக மாரியம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்தனர்.

அதைத் தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை அம்மை அழைக்கும் ஆலயத்தில் இருந்து காளி வேடம், அம்மன் வேடம் மற்றும் சாமி வேடம் அணிந்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தார்கள். இரவு 8:30 மணிக்கு கம்பம் பிடுங்கப்பட்டது. இன்று காலை செவ்வாடை தொண்டர்கள் சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

மதியம் அம்மனுக்கு அக்னி அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும், அன்னதானமும் நடைபெறுகிறது. இரவு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் முத்து பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது. வருகிற 11 ம் தேதி வரை கோவில் வளாகத்தில் தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.