சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026... பொருளாதாரத்தில் புதிய மாற்றங்கள் உருவாகும்

தர்மத்தின் வழியில் நடப்பவர்களுக்கு சனி பகவான் எப்போதும் நன்மைகளை வாழ்வியல் அனுபவங்கள் மூலம் அள்ளிக்கொடுக்கும் வள்ளலாக விளங்குவார்.
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026
Published on

ஒழுக்கத்தையும், தர்மத்தையும் நிலைநாட்டும் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகமான சனி பகவான், வாக்கிய பஞ்சாங்கப்படி நடப்பு தமிழ் விசுவாவசு வருடம், மாசி 22-ம் நாள், 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 06-ம் தேதி, வெள்ளிக்கிழமை, வளர்பிறை திரிதியை திதி, ஹஸ்தம் நட்சத்திரம், விருத்தி நித்திய நாமயோகம், பத்திரை கரணத்தில் காலை 8.31 மணியளவில் கும்பம் ராசியிலிருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

நவகிரகங்களின் சஞ்சாரத்தில் மந்தமான கதியும், கர்ம வினைகளின் பலாபலன்களை பாரபட்சமின்றி வழங்கும் நீதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய இரண்டரை ஆண்டுகள் அதாவது சுமார் 30 மாதங்கள் ஆகிறது. மனித வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை தரும் சனி பகவான் ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு பலன்களை அளித்தாலும், தர்மத்தின் வழியில் நடப்பவர்களுக்கு அவர் எப்போதும் நன்மைகளை வாழ்வியல் அனுபவங்கள் மூலம் அள்ளிக்கொடுக்கும் வள்ளலாகவே விளங்குவார்.

புதிய மாற்றங்கள்

மீனம் ராசி என்பது காலபுருஷ தத்துவப்படி மோட்சம், அயன சயன போகம் மற்றும் ஆன்மீகப் பயணங்களைக் குறிக்கும் இடம் ஆகும். அங்கு சனி பகவான் அமர்வது உலகளவில் மனிதர்களின் சுய விழிப்புணர்வையும், தர்மத்தின் மீதான நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும். ஆன்மீகம் மற்றும் ரகசியங்களின் இருப்பிடமான மீனத்தில் சனி அமர்வதால் அரசியல் மற்றும் அறிவியலில் மறைவாக இருந்த பல புதிய உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்.

இந்த சனிப்பெயர்ச்சி காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பல புதிய மாற்றங்கள் உருவாகும். மருத்துவத் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல புரட்சிகரமான முன்னேற்றங்கள் ஏற்படும். நீர் ராசியான மீனத்தில் சனி அமர்வதால், இயற்கைச் சீற்றங்கள், கடல் சார்ந்த பகுதிகளில் எதிர்பாரா நிலவியல் மாற்றங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படும்.

“உலகப் பொருளாதாரம் 2026-ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு ஒரு புதிய வேகம் பெறும். இந்தியாவின் பெருமை உலக அரங்கில் உயரும்”

ஆன்மீக விழிப்புணர்வு

மருத்துவத் துறையில் புற்றுநோய் மற்றும் தொற்று நோய்களுக்கான புதிய மருந்துகள் கண்டறியப்படும். உலகப் பொருளாதாரம் 2026-ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு ஒரு புதிய வேகம் பெறும். இந்தியாவின் பெருமை உலக அரங்கில் உயரும். மக்களிடையே ஆன்மீக விழிப்புணர்வு அதிகரித்து, தர்ம ஸ்தாபனங்கள் தோன்றும். நீர் நிலைகள் உள்ள பகுதிகளில் விபத்துகள், கடல் கொந்தளிப்புகள் ஏற்படும்.

இந்த சனிப்பெயர்ச்சிக்குரிய பொதுப்பரிகாரங்களாக, ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுவதும், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவதும், திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, குச்சனூர் போன்ற சனீஸ்வரர் தலங்களுக்கு ஒருமுறை சென்று வருவதும் நல்லது. சனி பகவான் ஒருவரது கர்மாவின் பிரதிபலிப்பாக செயல்படுவார் என்பதால், தூய மனதுடன் மற்றவர்களுக்கு பிரதிபலன் பாராமல் உதவி செய்வதும் சிறந்த பரிகாரம் ஆகும். அதனால் தர்மம் மூலம் கர்மம் விலகும்.

12 ராசிக்காரர்களுக்குரிய சனிப்பெயர்ச்சி பலன்களை அறிந்துகொள்ள கிளிக் செய்யவும்..

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026: தனுசு, மகரம், கும்பம், மீனம்

கணித்தவர்: சிவகிரி ஜானகிராமன்

Also Read
வார ராசிபலன் 22-02-2026 முதல் 28-02-2026 வரை
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com