கொல்லூர் மூகாம்பிகை கோவில் 
ஆன்மிகம்

மூன்று வேளையும் 3 திருக்கோலங்கள்.. முப்பெரும் தேவியராக அருள்பாலிக்கும் மூகாம்பிகை

மூகாம்பிகை தேவியை வழிபட்டால் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் கொல்லூர் நகரில் மூகாம்பிகை கோவில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகிய கொடசாத்ரி மலை அடிவாரத்தில் சவுபர்ணிகா நதிக்கரையில் அமைந்துள்ள இக்கோவிலின் சிறப்புகளை பார்ப்போம்.

அபிஷேகம் கிடையாது

1. பரசுராமர் உருவாக்கிய ஏழு முக்தி தலங்களில் கொல்லூரும் ஒன்று. கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு மூக்குத்தி புகழ் பெற்றது போல, கொல்லூர் தலத்தின் மூகாம்பிகை அன்னைக்கு, அணிவிக்கப்படும் 'பச்சை மரகதம் பதித்த பொற்சரம்' (தங்கச் சங்கிலி) மிகவும் விசேஷமாகும்.

2. அன்னையின் முன்பாக சுயம்பு ஜோதிர்லிங்கம் காணப்படுகிறது. இந்த லிங்கத்தின் நடுவே ஒரு தங்கக் கோடு, லிங்கத்தை இரண்டாகப் பிரிக்கிறது. அதன் இடது பாதி மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரையும், வலது பாதி முத்தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோரையும் குறிப்பதாக ஐதீகம். இந்த ஜோதிர்லிங்கத்துடன் மூகாம்பிகை தேவி ஐக்கியமாகிவிட்டதாக நம்பப்படுகிறது.

இந்த ஜோதிர்லிங்கத்தை எப்போதும் தங்கக் கேடயம் மூடியிருக்கும். இங்கு, மூகாம்பிகை அம்பாளின் திருவுருவச் சிலைக்கு எவ்வித அபிஷேகங்களும் செய்யப்படுவதில்லை, மாறாக அன்னைக்கு அலங்காரமும், தீபாராதனையும் மட்டுமே நிகழ்த்தப்படுகின்றன. அபிஷேகங்கள் அனைத்தும் ஜோதிர்லிங்கத்திற்கு மட்டுமே நடத்தப்படுகின்றன.

கொல்லூர் மூகாம்பிகை கோவில்

முப்பெரும் தேவியாய்...

3. இத்தலத்தின் அன்னை, தினமும் மூன்று வேளையிலும் காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று திருக்கோலங்களில் தரிசனம் தருவது சிறப்பாகும். கோவில் பிரகாரத்திற்குள் தினமும் மூன்று வேளைகளிலும் உற்சவ அம்பாள், மேளதாளங்களுடன் ஆலயத்தைச் சுற்றி வலம் வருகிறார். இதற்கு 'சிவேலி" என்று பெயர். இத்தலத்திற்கே உரிய இந்தச் சிறப்பான ஊர்வலத்தின்போதும், அந்தந்த காலத்திற்குரிய தேவியாகவே அம்பாள் பாவிக்கப்படுகிறார். காலை நேர சிவேலியின்போது காளியாகவும், மதிய நேர சிவேலியின்போது லட்சுமி தேவியாகவும், இரவு நேர சிவேலியின்போது சரஸ்வதி தேவியாகவும் வலம் வருகிறார். இந்த 'சிவேலி" உலா வரும் நேரத்தில் அம்பாளை தரிசிப்பது சிறப்பு.

4. நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும் அன்னை பராசக்தியை முப்பரிமாணங்களில் வழிபடுவது இத்தலத்தின் விசேஷ மரபாகும். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அன்னையை துர்கா தேவியாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியாகவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியாகவும் பாவித்து, அன்னையின் மூன்று தெய்வீக வடிவங்களுக்கும் ஒன்பது நாட்களும் பிரமாண்ட வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

தேர்த்திருவிழா

5. மாசி மாதத்தில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மூகாம்பிகை அன்னை முப்பெரும் தேவியரின் அம்சமாக விளங்குவதால் இங்கு வந்து வழிபட்டால் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

மூலிகை கசாயம்

6. ஆதிசங்கரர் இத்தலத்தில் தவம் இருந்தபோது, அவரது உடல்நலம் குன்றியதைக் கண்ட அன்னை பராசக்தி, நேரில் தோன்றி மூலிகை கலந்த கசாயத்தை வழங்கி அவரது உடல் நலத்தை தேற்றினார். அதன் நினைவாக, இன்றும் ஆலயத்தில் தினமும் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு, இஞ்சி, மிளகு, திப்பிலி மற்றும் வெல்லம் சேர்த்த கசாயப் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட இந்த கசாயம், பல உடல் நோய்களை போக்கும் அருமருந்தாக உள்ளது.