வெட்டி முறிச்சான் இசக்கியம்மன் கோவில் 
ஆன்மிகம்

கொட்டாரம் பெருமாள்புரம் இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.. இன்று தொடங்குகிறது

யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தபின் ஏபரல் 3-ந்தேதி காலையில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

கன்னியாகுமரி.மார்ச்.30-

கொட்டாரம் பெருமாள்புரத்தில் ஸ்ரீ வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்றன.

திருப்பணி வேலைகள் நிறைவு பெற்ற நிலையில் மகா கும்பாபிஷேக விழா இன்று மாலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து திருமுறை பாராயணமும் விநாயகர் பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், தேவி மூல மந்திர ஹோமம் திரவியஹோமம் போன்றவை நடக்கின்றன.

நாளை (31-ந்தேதி) காலை 8.30 மணிக்கு பூர்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது. காலை 10.30 மணிக்கு ஆதியில் தோன்றிய மூலஸ்தானத்தில் அமைந்து உள்ள தேவி ஸ்ரீ வெட்டி முறிச்சான் இசக்கி அம்பிகைக்கு கலசாபிஷேகம் நடக்கிறது.

ஏப்ரல் 1-ந்தேதி மதியம் 2 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து பறவை காவடி, இழுவை காவடி, நையாண்டி மேளம், சிங்காரி மேளம், செண்டை மேளம், கேரள தையம் ஆட்டம், கேரள காவடி கட்டுடன் பெண்களின் முளைப்பாரி, முத்துக்குடை அணிவகுப்புடன் பெண்கள் புனித நீர் எடுத்து ஊர்வலமாக வருகின்றனர். நெற்றிபட்டம் அணிவித்து யானை மீது அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது.

ஏப்ரல் 2-ந்தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 3-ந்தேதி காலை 8.30 மணிக்கு கடம்புறப்பாடு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து 9.30 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் ஸ்ரீவெட்டி முறிச்சான் இசக்கியம்மன் மற்றும் அதன் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பகல் 12 மணிக்கு அலங்கார தீபாரதனையும் மதியம் 1மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது.

இரவு 7.45 மணிக்கு சினிமா நாட்டுப்புற பின்னணி பாடகர் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி குழுவினரின் மக்களிசை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவை நடிகை ரோஜா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து 41 நாட்கள் மண்டல பூஜையும், மே மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கொடை விழாவும் நடக்கிறது.