பேராவூரணி,
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு கிராமத்தில் ஸ்ரீ பூரண புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ பட்டயத்து அய்யனார் ஸ்ரீ முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கடந்த 26-ம் தேதி திங்கட்கிழமை காலை கும்பாபிஷேக விழா தொடங்கியது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட யாக சாலையில் விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், ஸ்ரீ லெட்சுமி நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி தீபாராதனை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹனம், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற் காலை யாக பூஜை, பூர்ணாஹுதி நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மண்டப அர்ச்சனை, வேதிகார்ச்சனை, வேதபாராயணம், திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, அஷ்டபந்தனம் சாற்றுதல், மூன்றாம் கால யாகசாலை பூஜை தொடங்கி, பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.
புதன்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை தொடங்கி நாடி சந்தான ஸ்பர்சாஹுதி, பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று, கோபுர மகா கும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் கொன்றைக்காடு, கள்ளங்காடு, காலகம், ஆயிங்குடி தெற்கு, மேல மணக்காடு, திருப்பூரணிக்காடு, ஆணைக்காடு, மிதியக்குடிக்காடு, தென்னங்குடி - கீழக்காடு, பேராவூரணி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.