கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்த பக்தர்கள் 
ஆன்மிகம்

மேலூர்: கச்சிராயன்பட்டி கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம்

கச்சிராயன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை:

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த கச்சிராயன்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் கருப்புசாமி கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் நிறைவடைந்ததையடுதது கும்பாபிஷேக பூஜை தொடங்கியது. முன்னிட்டு கோவிலை சார்ந்த பக்தர்கள் 15 நாட்கள் விரதம் மேற்கொண்டனர்.

கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு மூன்று நாட்கள் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இப்பூஜைகள் நிறைவடைந்ததும் கடம் புறப்பாடு நடைபெற்றது. காப்பு கட்டிய பக்தர்கள் யாகசாலையில் இருந்து புனித நீரினை சுமந்தபடி கோவிலை ஊர்வலமாக சுற்றி வந்தனர்.

அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரம் முழங்க, வானத்தில் கருடன் வட்டமிட, புனித நீரினை கும்பத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கருப்புசுவாமிக்கு விசேஷ தீபாராதனை நடைபெற்றது.

இவ்விழாவில் கச்சிராயன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.