திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம் 
ஆன்மிகம்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி திருவிழா தொடங்கியது

மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவொற்றியூர்:

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா நேற்று இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் சந்திர பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் உற்சவம், இரவு தியாகராஜ சாமி மாடவீதி உற்சவம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 9 மணியளவில் 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகர சாமி, திரிபுர சுந்தரியுடன் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருகிறார்.

மார்ச் 2-ந் தேதி காலை 10.10 மணியளவில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாண உற்சவமும், பிற்பகல் 63 நாயன்மார்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாடவீதி உற்சவமும் நடைபெறும். இரவு 9 மணி அளவில் தியாகராஜ சாமி உற்சவம் நடக்கிறது.