

கும்பகோணம்,
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019-ம் ஆண்டு அத்திவரதர் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு, 48 நாட்கள் பக்தர்களுக்கு சயன மற்றும் நின்ற கோலத்தில் அருள்பாலித்தார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் முதல் 24 நாட்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் தரிசனம் தந்தார்.
இதேபோல் கும்பகோணத்தில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவிலிலும் அத்திவரதர் தரிசனம் நிகழ்வு நடக்க இருக்கிறது. பிரம்மன் கோவில் தெரு பகுதியில் இந்த கோவில் கடந்த 1739-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 180 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளுகின்றனர். இந்த கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்தால் சகல தோஷங்களும், முன்ஜென்ம பாவங்களும் நீங்கும். நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
இந்த கோவிலில் கடந்த 1915-ம் ஆண்டு அத்திவரதர் பாதாள அறையில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்னர் சுமார் 98 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை பாதாள அறையில் இருந்து அத்திவரதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
விழா நாட்களில் தைலகாப்பு, புஷ்ப சேவை, ஊஞ்சல் சேவை ஆகியவை நடக்க இருக்கிறது. தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் சாமி தரிசனம் செய்ய உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.