சிறப்பு வழிபாடு 
ஆன்மிகம்

மசினகுடி: ஈசான்ய லிங்கேஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு சிறப்பு பூஜை

ஈசான்ய லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் பிரசித்தி பெற்ற ஈசான்ய லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கருணாம்பிகை அம்மன், ஈசான்ய லிங்கேஸ்வரருடன் எழுந்தருளியிருக்கும் இக்கோவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிஷேகத்துடன் திறக்கபட்டது. இந்த கோவிலில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. மசினகுடி, மாயர், மாவனல்லா , ஊட்டி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பக்தர்கள் தினந்தோறும் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் கோவில் திறக்கப்பட்டு ஓராண்டு ஆனதை அடுத்து முதலாம் ஆண்டு அபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக காலையில் ஈசானிய லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.

108 சங்குகளில் புனித நீர் நிரப்பி, வேதமந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டது.பின்னர் அந்த புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஈசான்ய லிங்கேஸ்வரர் மற்றும் கருணாம்பிகை அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

மதியம் 2 மணிக்குப் பிறகு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பிறகு பிரதோஷ பூஜை நடைபெற்றது.