பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா

குண்டம் விழாவின் தொடக்கமாக, கோவில் முறைதாரர் அம்மனின் படைக்கலத்தை சுமந்தபடி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தார்.
பூச்சாட்டு விழாவை முன்னிட்டு அம்மனின் படைக்கலத்தை சுமந்து வந்த முறைதாரர்
பூச்சாட்டு விழாவை முன்னிட்டு அம்மனின் படைக்கலத்தை சுமந்து வந்த முறைதாரர்
Published on

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் விழா விமரிசையாக நடைபெறும். விழாவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான குண்டம் விழா வரும் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதிப்பார்கள்.

இதற்கான பூச்சாட்டு விழா நேற்று (16.3.2026) நள்ளிரவில் தொடங்கியது. விழாவிற்காக சிக்கரசம்பாளையம், சிக்கரசம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், வெள்ளியம்பாளையம் புதூர், காளி திம்பம் உட்பட பல்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாரை தப்பட்டையுடன் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஒன்று சேர்ந்தார்கள்.

திருவிழாவின் தொடக்கமாக, கோவில் முறைதாரர் அம்மனின் படைக்கலத்தை தலையில் சுமந்தபடி, பண்ணாரி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சிவன் கோவில், மாரியம்மன் கோவில், சருகு மாரியம்மன் கோவில், முனியப்பன் கோவில், ராகு கேது கோவில் ஆகிய தலங்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தார்.

பின்னர் இன்றுஅதிகாலை சுமார் 4 மணியளவில் படைக்கலம் கருவறைக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு அம்மனிடம் குண்டம் விழாவிற்கு உத்தரவு கேட்கப்பட்டது. இதற்காக, அம்மன் சிலை மீது சிவப்பு மற்றும் வெள்ளை அரளி பூக்கள் வைக்கப்பட்டன. எல்லோரும் அம்மனை மனமுருகி வேண்டினார்கள். அப்போது அம்மன் சிலையில் இருந்து வெள்ளை அரளிப்பூ கீழே விழுந்தது. இதன்மூலம் குண்டம் விழாவுக்கு அம்மன் உத்தரவு கொடுத்து விட்டதாக ஐதீகம். இதனைப் பார்த்த பக்தர்கள் பண்ணாரி அம்மனை போற்றி முழக்கம் எழுப்பியபடி தரிசனம் செய்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தி பூச்சாட்டு விழா நடைபெற்றது.

பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்கியது. இன்று இரவு சப்பர வீதி உலா நடைபெறும். பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் உற்சவர்கள், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பட்டு சிக்கரசம்பாளையம் அம்மன் கோவிலை அடைந்ததும் அங்கு சப்பரம் வைக்கப்படும். நாளை முதல் அம்மன் சப்பரம் கிராமங்கள்தோறும் செல்லும்.

Also Read
திருப்புளிங்குடி காய்சினி வேந்தப் பெருமாள் கோவிலில் மூன்று கருட சேவை
பூச்சாட்டு விழாவை முன்னிட்டு அம்மனின் படைக்கலத்தை சுமந்து வந்த முறைதாரர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com