முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவில்  
ஆன்மிகம்

முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி திருவிழா: 27-ந்தேதி கொடியேற்றம்

பங்குனித் திருவிழாவின் 7-ம் நாள் இரவு அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்டசாமி கோவில் உள்ளது. இது அய்யா வைகுண்டசாமியின் பஞ்சபதிகளில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

27-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 12 மணிக்கு முட்டப்பதி திருப்பாற் கடலில் அய்யாவழி பக்தர்கள் தீர்த்தமாடிபதமிடும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் உச்சிப்படிப்பு, அன்னதர்மம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இரவு 7.30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ம் திருவிழாவான 28-ந்தேதி முதல் 7-ம் திருவிழாவான 2-ந் தேதி வரை தினமும் பணிவிடைகள், உச்சிப்படிப்பு, தர்மங்கள் மற்றும் இரவு வாகன பவனி போன்றவை நடக்கின்றன.

2 மற்றும் 3-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், 4 மற்றும் 5-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும், 6-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு சர்ப்ப வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும், 7-ம் திருவிழா (ஏப்ரல் 2) இரவு 7.30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

8-ம் திருவிழாவான அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி இரவு அய்யா வைகுண்டசாமி முட்டப்பதி கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் அதைத்தொடர்ந்து உகப்படிப்பும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பால் அன்னதர்மம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரே அமைந்து உள்ள கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு அன்னதர்மம் நிகழ்ச்சி நடக்கிறது.

9 மற்றும்10-ம் திருவிழா நாட்களில் (ஏப்ரல் 4 மற்றும் 5) இரவு7.30 மணிக்கு சப்பர வாகனத்தில் அய்யா எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 11-ம் திருவிழாவான 6-ந்தேதி பகல் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.

மறுநாள் (7-ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு திருக்கொடி இறக்க நிகழ்ச்சியும் தான தர்மங்களும் நடக்கின்றன. இத்துடன் திருவிழா நிறைவுபெறும். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி மூத்த தர்மகர்த்தா கே.மனோகரச் செல்வன், தர்மகர்த்தா கே.எம்.கைலாஷ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.