மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவத்தின்போது, கொட்டும் மழையில் பக்தர்கள் குடைகளை பிடித்தபடி கற்பூர தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
ஊஞ்சல் உற்சவம்
ஊஞ்சல் உற்சவம்
Published on

மேல்மலையனூர்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசையன்று இரவு ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடந்தது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதன்பிறகு உற்சவர் அம்மனுக்கு பல்வேறு வகையான மலர்களை கொண்டு சேஷசயனம் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 11 மணியளவில் மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது அங்கு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இருப்பினும் ஊஞ்சல் மண்டபம் எதிரில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையில் குடைகளை பிடித்தபடி கற்பூர தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

நள்ளிரவு 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து, அம்மனுக்கு அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள் மண்டபத்தை அடைந்தார்.

ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Also Read
பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வீதி உலா.. தரையில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
ஊஞ்சல் உற்சவம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com