ஆழ்வார்திருநகரி கருட சேவை 
ஆன்மிகம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம், கருட சேவை

நவதிருப்பதி பெருமாள்கள் புஷ்ப அலங்காரத்துடன் கருட வாகனங்களில் எழுந்தருள் அருள்பாலித்தனர்.

தென்திருப்பேரை,

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சுவாமி நம்மாழ்வார் திரு அவதாரம் செய்த வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மங்களாசாசனம்

நம்மாழ்வார் மங்களாசாசனம் மற்றும் கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 5ம் திருநாளான நேற்று காலை 11 மணிக்கு ஆதிநாதர் ஆழ்வார் கோவிலின் பூப்பந்தல் மண்டபத்தில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து நவதிருப்பதி உற்சவமூர்த்திகள் பல்லக்கில் அவரவர்கள் திவ்ய தேசங்களிலிருந்து ஆழ்வார் கோவில் வந்தனர்‌.

நம்மாழ்வார் கோவில் முன் மண்டபம் அருகிலிருந்து ஶ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர் கடிவான், திருப்புளியங்குடி காய்சினவேந்தன், தொலைவில்லிமங்கலம் செந்தாமரை கண்ணன், இரட்டை திருப்பதி தேவர்பிரான், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி. ஆகியோருக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்து பிரசாதங்கள் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் ‌மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரிடம் பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டார்.

மாலை 5 மணிக்கு அனைத்து பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சேவா காலத்தைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி வழங்கப்பட்டது.

கருட சேவை

இரவு 10.30 மணிக்கு நவதிருப்பதி பெருமாள்கள் புஷ்ப அலங்காரத்துடன் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தந்த பல்லக்கிலும் எழுந்தருளி, ஒருவர்பின் ஒருவராக வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருக்குறுங்குடி பேரருளாளர் ராமானுஜ ஜீயர் சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம்(எ) கணேசன். உறுப்பினர்கள் காளிமுத்து, ராமலட்சுமி, பொன்ராஜ், கன்னிராஜா செயல் அலுவலர்கள் சதீஷ். ஏரல் தாசில்தார் செல்வகுமார், ஸ்ரீவைகுண்டம் கோவில் செயல் அலுவலர் மணிகண்டன். கள்ளபிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார் திருநகரி காவல் ஆய்வாளர் வீராசாமி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.