மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜர், சிவகாமசுந்தரி 
ஆன்மிகம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடராஜர் உற்சவம்

மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு பல்வேறு மங்களப் பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

மயிலாடுதுறை:

திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர பெருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

9-ம் திருநாளில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் சுவாமி-அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இந்நிலையில், இன்று நடராஜர் உற்சவம் நடைபெற்றது. இந்த உற்சவத்திற்காக நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி ஆகியோர் மண்டபத்தில் எழுந்தருளினர். இதையடுத்து பல்வேறு மங்களப் பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடராஜர் கோவிலின் 4 வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்கள் வீடுகள் முன்பு கோலமிட்டு, அர்ச்சனைகள் செய்தும் வழிபட்டனர்.