நெல்லையப்பர் கோவில் 
ஆன்மிகம்

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா: 22-ம் தேதி கொடியேற்றம்

பங்குனி உத்திர திருவிழாவின் இரண்டாம் நாளில் இருந்து 9ஆம் திருநாள் வரை மாலையில் உடையவா் லிங்கத்தை தரிசனம் செய்யலாம்.

திருநெல்வேலி:

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் 22ஆம் தேதி (22.3.2026) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, பூஜைகளை தொடா்ந்து, காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெறும்

4ஆம் திருநாளான மாா்ச் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வும், இரவு 7 மணிக்கு சுவாமி -அம்பாள் பஞ்ச மூா்த்திகளுடன் திருவீதியுலாவும் நடைபெறும். 10 ஆம் திருநாளான மார்ச் 31ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 7.30 மணிக்குள் அம்பாள் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் விழாவும் நடைபெற உள்ளது.

உடையவர் லிங்க தரிசனம்

பங்குனி உத்திர திருவிழாவின் சிறப்பம்சமாக உடையவர் லிங்க தரிசனம் கருதப்படுகிறது. கருவறையில் உள்ள மிகச்சிறிய லிங்கமான இந்த உடையவா் லிங்கம், பங்குனி உத்திர திருவிழா காலங்களில் மட்டுமே 8 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தருவார். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவின் இரண்டாம் நாளில் இருந்து 9 ஆம் திருநாள் வரை தினமும் மாலை 6.30 மணிக்கு கோவில் உற்சவா் மண்டபத்தில் உடையவா் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த அபிஷேகத்தைக் காணும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக நீண்ட காலம் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.