நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக அம்மன் அழைப்பு மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்று, அம்மன் முத்து பல்லக்கில் அமர்ந்து நகர்வலம் வந்தார். வீடு வீடாக சென்று பக்தர்களுக்கு தரிசனம் தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன் பின்னர் கோவிலை அடைந்தார். பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், பொங்கல் வைத்து படையலிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் ஊஞ்சல் உற்சவம், இரவு முத்தாலம்மன் நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மூன்றாவது நாளான இன்று பால்குடம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி, வீடு வீடாக சென்று பல்வேறு மண்டகப்படிகளை ஏற்று மீண்டும் கோவிலை அடைகிறார். நாளை காலையில் பூஞ்சோலை சென்றடைகிறார்.