ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த மஞ்சூர் அருகே பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோவில் உள்ளது. கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில், இளைய மடாதிபதி வடிவேல் சுவாமி முன்னிலையில் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, கடந்த சில நாட்களாக திருப்பணிகள் மேற்கொண்டு கோவில் கோபுரங்களுக்கு வர்ணம் பூசி பொலிவுப்படுத்தினர்.
இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் இரண்டாம் சன்னிதானம் சாந்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் ஒரு பகுதியாக மகா தரிசனம், தீர்த்த பிரசாதம் வழங்குதல், அலங்கார பூஜை தரிசனம், அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை காவடி பெருவிழா நடக்கிறது.