பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு மாசி மாத வளர்பிறை கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் மோகனூர் காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்,பிலிக்கல்பாளையம், கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பிராந்தியத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகம் கடவுள், பொத்தனூரில் உள்ள பச்சமலை முருகன் கோவில்,
பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், , பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில், கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரையில் அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில்,
நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள சுப்ரமணியர், மற்றும் ராஜா சுவாமி திருக்கோவில் உள்ள ராஜாசுவாமி, பொத்தனூர் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலமுருகன் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.