கோபத்தை விட்டு அன்பு காட்டுங்கள்!

கோபத்தைக் கையாள்வதற்கு திருமறை வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.
கோபத்தை கட்டுப்படுத்துங்கள்
கோபத்தை கட்டுப்படுத்துங்கள்
Published on

மகிழ்ச்சி, சோகம், பதற்றம், வெறுப்பு போன்ற மனிதனின் அடிப்படை உணர்ச்சிகளில் ஒன்று கோபம். கட்டுப்பாடற்ற கோபம், மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். 'யார் வேண்டுமானாலும் கோபப்படலாம், அது எளிது; ஆனால் சரியான நபரிடம், சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான நோக்கத்திற்காக, சரியான வழியில் கோபப்படுவது எல்லோராலும் முடியாது, அது எளிதல்ல என்கிறார் அரிஸ்டாடில்.

காயீனின் கோபத்தின் விளைவு

ஆதிப்பெற்றோர் ஆதாம்-ஏவாளின் பிள்ளைகள் காயீன், ஆபேல். காயீன் நிலத்தைப் பயிரிட்டான். ஆபேல் ஆடுகளை மேய்த்தான். ஒருநாள் காயீன் தன் நிலத்தின் கனிகளில் சிலவற்றையும், ஆபேல் தன் மந்தையின் தலையீற்றுகளில் கொழுமையானவைகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகப் படைத்தார்கள்.

சிறந்தவற்றைப் படைத்த ஆபேலின் காணிக்கையை கர்த்தர் அங்கீகரித்தார். சிலவற்றைப் படைத்த காயீனின் காணிக்கையை அவர் அங்கீகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் கோபமும், எரிச்சலும் உண்டானது.

அப்பொழுது கர்த்தர் காயீனிடம், உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று?, உன் முகநாடி ஏன் வேறுபட்டது?' என்றார் (ஆதியாகமம் 4:6).

காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடு பட்சமாய் பேசினான். அவர்கள் வயல்வெளியில் இருக்கும் வேளையில், காயீன் ஆபேலை கோபத்தின் மிகுதியால் கொடூரமாய்க் கொன்று போட்டான். கோபத்தின் விளைவால் பாவமும், பழியும் கடவுளின் சாபமும், மரண பயமும் காயீனுக்கு ஏற்பட்டதைக் காணலாம்.

மோசேயின் கோபத்தின் விளைவு

சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடு பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார். மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கவே, ஜனங்கள் ஆரோன் தலைமையில் ஒரு பொற்கன்றுக்குட்டியை செய்து, எங்களை எகிப்து தேசத்தில் இருந்து அழைத்துக்கொண்டு வந்த எங்கள் தெய்வங்கள் இவைகளே என்று, சர்வாங்க தகன பலிகளையிட்டு, சமாதான பலிகளைச் செலுத்தி, புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.

இதனைக் கண்ட கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ. இஸ்ரவேலர் தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள். அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலர் தங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த தங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொல்லுகிறார்கள்’ என்று கர்த்தர் மோசேயினிடத்தில் தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை மோசேயும் யோசுவாவும் கண்டனர். மோசே பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவராகி, தன் கையிலே இருந்த கடவுளுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளை மலையின் அடிவாரத்திலே எறிந்து உடைத்துப்போட்டார்.

மோசேயின் கானான் பிரவேசத்திற்கு தடையாயிருந்த காரணிகளில் இதுவும் ஒரு மிக முக்கியமான காரணம்.

கோபத்தை கையாள்வது எப்படி?

கட்டுப்பாடற்ற கோபம் தீவினைகளை ஏற்படுத்தும் என்றால், கட்டுப்பாட்டில் உள்ள கோபம்தான் அதன் ஊற்றுக்கண். கோபத்தைக் கையாள்வதற்கு திருமறை தரும் சில வழிகாட்டுதல்களைக் காண்போம்.

1) அன்பு காட்டுங்கள்: 'கோபப்படுவதற்கு மாறாக, அன்பை வெளிப்படுத்துங்கள். ஏனெனில், அன்பு அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது' (1 கொரிந்தியர் 13:5).

2) விட்டு விடுங்கள்: கோபப்படுவதை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட முயற்சிப்பது நல்லது. 'இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்' (கொலோசெயர் 3:8).

3) நீக்கி விடுங்கள்: கோபத்தை முற்றிலுமாக நம்மை விட்டு நீக்கிவிடுவது எல்லாவற்றிலும் சிறந்தது. 'சகல விதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது' (எபேசியர் 4:31).

4) தாமதப்படுத்துங்கள்: 'கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி, அதைத் தாமதப்படுத்துவது' என்கிறார் செனேகா எனும் அறிஞர். ஆகையால், என் பிரியமான சகோதரரே, 'யாவரும் கேட்கிற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்' (யாக்கோபு 1:19).

5) பாவஞ்செய்யாதிருங்கள்: கோபம் வெளிப்படுவதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் கோபமான வேளையில் எத்தீய செயலையும் செய்துவிடாதபடி உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது' (எபேசியர் 4:26).

Also Read
12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பகோணத்தில் 1-ந்தேதி அத்திவரதர் தரிசனம் - ஏற்பாடுகள் மும்முரம்
கோபத்தை கட்டுப்படுத்துங்கள்

கோபத்திற்கு சிறந்த பதில் மவுனம். கோபம் கொள்வதை திருமறை ஒருபோதும் ஆதரிப்பதுமில்லை; நியாயப் படுத்துவதுமில்லை. 'மாம்சத்தின் கிரியைகளில் கோபமும் ஒன்று' (கலா.5:20).

மூடத்தனத்தின் வெளிப்பாடாகவும், தீய பண்புகளில் கோபமும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 'மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே' (யாக்கோபு 1:20) என்று திருமறை தீர்க்கமாக சொல்கிறது.

-அருட்பணி ம பென்னியமின், தோட்டப்பாளையம், வேலூர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com