பறவை காவடி எடுத்து வந்த பக்தர் 
ஆன்மிகம்

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித் திருவிழா.. காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏரளாமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடிகள் சுமந்தும் வந்து சுவாமியை வழிபட்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலான வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ வென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டின் மாசித் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படி திருவிழா நடத்தப்பட்டது. இதில் மதியம் மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான பத்தாம் திருநாளை முன்னிட்டு நேற்று காவடி ஊர்வலம், பால்குட ஊர்வலம் பிரமாண்டமாக நடைபெற்றது.

பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான குறும்பலாபேரி, திப்பனம்பட்டி, ஆவுடையானூர், பெத்தநாடார்பட்டி, கீழப்பாவூர், செல்வ விநாயகர்புரம், கல்லூரணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், மயில் காவடி, நாக காவடி, பிரம்மாண்ட பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகள் சுமந்தும் கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டனர். காவடி எடுத்து வந்தவர்களிடம் பக்தர்கள் மாலை செலுத்தி திருநீறு பெற்றுக் கொண்டனர்.

பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவிலில் தொடங்கிய பால்குட ஊர்வலத்தை நெல்லை தெட்சணமாற நாடார் சங்க தலைவரும் தொழிலதிபருமான ஆர்.கே.காளிதாசன் துவக்கி வைத்தார். மேலும் நிகழ்வின் தொடக்கமாக பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு ஆர்கே காளிதாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற பால்குட ஊர்வலத்தின் காரணமாக நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Also read:பல்லி சாஸ்திரம்.. உடலின் எந்த பாகத்தில் விழுந்தால் என்ன பலன்?