புரட்டாசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதத்திற்கு இரண்டு முறை பிரதோஷ வழிபாடு நடைபெறும். சாமி சன்னதியில் இருந்து கிழக்கு ராஜகோபுரம் வரை 5 இடங்களில் உள்ள நந்தி பெருமானுக்கு பிரதோஷ வழிபாட்டின்போது பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷ தினமான நேற்று ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்திக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கோவிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு வந்து வழங்கினர். இந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வை பக்தர்கள் கண்குளிர தரிசனம் செய்தனர்.
ஆரணி புதுக்காமூர் பகுதியில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத புத்திரகா மேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் நந்திக்கும், உற்சவர் சாமிக்கும், பாலா லய சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, மலர்களால் சாமியை அலங்கரித்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கோட்டை கைலாசநாதர் கோவில், பூமிநாதர் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், கங்கையம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கங்காதீஸ்வரர் கோவில், முள்ளிப்பட்டு ஆபத்சகாயேஸ்வரர் கோவில், காமக்கூர் சந்திரசேகர சுவாமி கோவில், அக்ராபாளையம் மார்க்கசகா யேஸ்வரர் கோவில், மெய்யூர் மெய்கண்டீஸ்வரர் கோவில், அடையபலம் காலகண்டேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் கோவில், பையூர் - சேவூர் பகுதியில் உள்ள விருப்பாச்சீஸ்வரர் கோவில், ராட்டினமங்கலம் கற்பகநாதர் சிவன் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவிலிலும் பிரதோஷ விழா நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வந்தவாசி நகரில் உள்ள சத்புத்திரி நாயகி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் தங்க கவசத்துடன் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அலங்கரிக்கப்பட்ட ஜலகண்டேஸ்வரர் உற்சவர் சிலையை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கீழ்பென்னாத்தூரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வீரட்டேசுவரர், நந்தி மற்றும் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்கள் கோவில் உட்பிரகார உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா. பிரதோஷ நாளில் கோவிலுக்கு வருகை தந்த மெக்சிகோ நாட்டினர், கோவிலில் நடைபெற்ற வழிபாட்டு முறைகளை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். நந்தியம்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபி ஷேகத்தை மெய்சிலிர்த்து கண்டுகளித்தனர். வழிபாட்டு நிகழ்வுகளை தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். மேலும், கோவிலின் ஆன்மிக சிறப்புகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் மறுபிறவி போக்கும் தலமான வேதாந்தநாயகி விஸ்வநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. வழிபாட்டில் விஸ்வநாத சாமிக்கு ருத்ராட்சங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விஸ்வநாதர், வேதாந்தநாயகி மற்றும் நந்தி பகவானுக்கு மஞ்சள், திரவியம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர் சந்தனம் என 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அம்மாப்பேட்டை அருகே கீழகோவில்பத்து பூலோகநாயகி அம்மன் பூலோகநாதர் கோவில், அம்மாப்பேட்டை அருணாச்சலேஸ்வரர், முத்தீஸ்வரர், உடையார்கோவில் தர்மவல்லி அம்மன் கரவந்தீஸ்வரர், புத்தூர் வன்மீக நாதர் கோவில் உள்ளிட்ட பலவேறு கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.