ஆன்மிகம்

நன்மைகளை அள்ளித்தரும் ரமலான்

ரமலான் நோன்புக் காலமானது மன இச்சைகளிலிருந்து பாதுகாக்கும் தடுப்புச் சுவராக மாறி, பொறுமை என்ற மகத்தான பண்பை வாழ்க்கை முழுக்க அழகுப்படுத்துகின்றது.

வசந்தங்கள் நிறைந்த ரமலான் மாதத்தில் கதிரவன் உதயம் முதல், மறையும் வரை உண்ணாமல், பருகாமல் இறைவனுக்காக நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் கடமையாகும். இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ரமலான் நோன்புக்காலம் முஸ்லிம்களின் வசந்தகாலமாகக் கருதப்படுகிறது.

திருக்குர்ஆன் (2:183) குறிப்பிடுகிறது: “நம்பிக்கை கொண்டோர்களே, உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்"

இறையச்சமென்ற ஆடையே இம்மை, மறுமையின் பாதுகாப்பான கேடயம், அதனை அணிந்துகொள்ள நோன்பு சாலச்சிறந்தது. ஒவ்வொரு வினாடியும் பல்லாயிரம் நன்மைகளைச் சுமந்து வரும் இம்மாதம் மனித சமூகத்திற்கு புதையல் போன்றதாகும்.

அதேநேரத்தில் நோயாளிகள், பயணத்தில் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு நோன்பு அளிக்கப்பட்டுள்ளது. வைப்பதில் இருந்து விலக்கும் இதையே திருக்குர் ஆன் (2:184) இவ்வாறு குறிப்பிடுகிறது: "ரமலான் நோன்புக்காலங்களில், உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்றுவிடவும். எனினும், அதற்கு சக்தி பெற்றிருப்போர் அதற்குப் பரிகாரமாக, ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்; எனினும், எவரேனும் உபரியாக நன்மை செய்தால் அது அவருக்கு நல்லது. ஆயினும் நீங்கள் நோன்பின் பலனை அறிவீர்களானால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்".

ரமலான் மாதம் நமக்கு அள்ளித்தரும் நன்மைகள் குறித்து காண்போம்.

பிரார்த்தனை:

தனக்காக அடியான் செய்யும் தியாகங்களை அங்கீகரிக்கும் விதமாக நோன்பிருக்கும் அடியானின் சஹர் நேரம், இரவின் மூன்றாம் பகுதி, நோன்பை துறக்கும் இப்தார் நேரம், தொழுகை அழைப்பான பாங்கிற்கும், இகாமத்திற்கும் இடைப்பட்ட கால நேரம், நோன்பிருக்கும் நேரம், நோன்பிருந்து சஜ்தாவிலிருக்கும்போது மற்றும் ரமலானில் வெள்ளிக்கிழமை ஆகிய நேரங்களில் நோன்பிருப்பவர் கேட்கும் பிரார்த்தனைகளை அல்லாஹ் முகம் மலர்ந்து ஏற்றுக்கொள்கிறான்.

கேடயம்:

மன இச்சைகளிலிருந்து பாதுகாக்கும் தடுப்புச் சுவராக மாறி, பொறுமை என்ற மகத்தான பண்பை வாழ்க்கை முழுக்க அழகுப்படுத்துகின்றது. இதெல்லாம் விட, பாவமான செயல்களில் ஈடுபடுதலை கடுக்கும் இறையச்சம் என்ற பண்பை விதைத்து பதப்படுத்துகிறது. சிறிய நன்மைகளை பன்பமடங்காக பெருக்கி நரகத்திற்கும், மனிதனுக்கும் தடையாக நோன்பு விளங்குகிறதென்பது நபிமொழிகள் நமக்கு தெரிவிக்கின்றன.

நன்மை-தீமைகளை பிரித்தல்

நன்மை, தீமை இவற்றைப் பிரித்து மக்களை நேர்வழிப்படுத்தக்கூடிய, உலக இஸ்லாமியர்களின் உயிர்நாடியோடு இணைந்துத் துடிக்கும் திருக்குர்ஆன் இறங்கிய மாதமாக ரமலான் சிறப்பு பெறுகிறது. “ரமலான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; நன்மை - தீமைகளைப் பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது" என்கிறது திருக்குர்ஆன் (2:185).

சொர்க்க வாசல்:

கஸ்தூரி மணம் கமழும் நிரந்தரமான உலகம், அழிவுகள் காணாத அழகிய இடம், நிறம் மாறாத ஆறுகள், நிழல்கள் நிறைந்த மரங்கள், தங்கம், வெள்ளிகளால் செய்யப்பட்ட பாத்திரங்கள், இரவுகள் காணாத அமைதியான அனைத்து நன்மைகளின் சங்கமம் சொர்க்கமாகும். இதனை அடைவதே இவ்வாழ்வின் மூல நோக்கம். சொர்க்கத்தின் கதவு திறக்காதா? அதில் தன் கால்கள் தடம் பதியாதா என மக்கள் ஏங்கும் சொர்க்கவாசல் இம்மாதத்தில் திறக்கப்படுகிறது. நரக வாசல் முற்றிலும் அடைக்கப்பட்டுவிடுகிறது. ஆதமுடைய சந்ததியினரை நரகத்திற்குக் கொண்டு செல்வேன் என்று சவால் விட்ட ஷைத்தான்களும் விலங்கிடப்பட்டு புனிதம் நிறைந்த மாதமாக ரமலான் இருப்பதை நபிமொழிகள் உறுதி செய்கின்றன.

Also read:ரம்ஜான் பண்டிகை: தமிழகம் முழுவதும் 1,212 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பாவ மன்னிப்பு:

பாவங்கள் மன்னிக்கப்பட்டு சுவனம் செல்ல மாட்டோமா? என்ற ஏக்கம் இல்லாத மனிதர்கள் பூமியில் இல்லை. இறைநம்பிக்கை கொண்டு நோன்பு நோற்று, இரவு-பகல் நின்று வணங்கி, பாவங்களை நினைத்து அழுது மன்னிப்பு கோரினால் இம்மாதத்தில் பெரும்பாவங்கள் தவிர்த்து, சிறிய பாவங்கள் மன்னிக்கப்பட்டு பாவமற்ற மனிதனாக மாற ரமலான் பாதைவகுக்கின்றது.

நன்மைகள் பன்மடங்கு பெருகுதல்:

அல்லாஹ்விற்காக அடியான் நோன்பு நோற்பதை அங்கீகரிக்கும் வண்ணம் மற்ற மாதங்களில் ஒரு நன்மைக்கு ஒரு கூலி என்றால், இம்மாதத்தில் எழுபதாகப் பெருக்கி கண்ணியம் செய்கிறான் இறைவன்.

-ஏ.எச்.யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.

Also read:ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் :தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு