தெப்பத் திருவிழா கொடியேற்றம் 
ஆன்மிகம்

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வரும் 31-ந்தேதி நடைபெறுகிறது.

திருச்சி:

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு முந்தைய நாளில் தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டின் தெப்பத்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

முன்னதாக தாயுமானவ சுவாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும், மேளதாளங்கள் முழங்கிட ரிஷபக் கொடி ஏற்றப்பட்டு மகா தீபராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தெப்பத்திருவிழா தொடங்கியதை தொடர்ந்து வாகன வீதிஉலா நடைபெறும். கற்பக விருட்ச வாகனம், பூத வாகனம், கமலம், கைலாச பர்வதம், அன்னம், வெள்ளி ரிஷப வாகனம், யானை வாகனம், பல்லக்கு, நந்திகேஸ்வர், சிம்மம், தங்க குதிரை, பல்லக்கு என சுவாமி, அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வரும் 31-ந்தேதி இரவு நடைபெறும். அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி, தெப்பக்குளத்தில் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

தொடர்ந்து 1-ந்தேதி பங்குனி உத்திரத்தையொட்டி தெப்பக்குளத்தில் காலை 9 மணிக்குமேல் தீர்த்தவாரியும், இரவு சண்டிகேஸ்வரர் புறப்பாடும், தொடர்ந்து அவரோகணம் எனப்படும் கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.