திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது. இன்று காலையில் 8.15 மணி முதல் 8.35 மணிக்குள் கும்ப லக்னத்தில் வேத அறிஞர்களின் மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, பக்தர்களின் கோவிந்த நாம முழக்கத்திற்கு மத்தியில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக சுவாமியின் திருச்சி உத்சவம் காலை 6.30 மணி முதல் 8.15 மணி வரை நடைபெற்றது. இதன்மூலம், சுவாமி தனது பிரம்மோற்சவ ஏற்பாடுகளை முன்கூட்டியே ஒருமுறை மேற்பார்வையிடுவதாக ஐதீகம்.
திருச்சி உற்சவத்தையடுத்து அர்ச்சகர்கள் விஸ்வக்சேன வழிபாடு, வாஸ்துஹோமம், கருட லிங்கஹோமம், கருட பிரதிஷ்டை மற்றும் ரக்சா பந்தனம் போன்ற பூஜைகளை நடத்தினர். பின்னர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார், ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி முன்னிலையில் கொடிக்கம்பத்தில் கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதன் நோக்கம் கணங்களையும், தெய்வங்களையும், பக்தர்களையும் பிரம்மோற்சவ நிகழ்ச்சிக்கு அழைப்பதாகும்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி எம்.ரவிச்சந்திரா, இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம் மற்றும் அதிகாரிகள், கோவில் அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் பிரமாண்டமான விழாவுடன் தொடங்கியிருக்கிறது. இன்று முதல் 16-ம் தேதி வரை கோவுலில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பகவானின் பிரம்மோற்சவத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 12 ஆம் தேதி கருட சேவை, பிப்ரவரி 13 ஆம் தேதி தங்கத் தேரோட்டம், பிப்ரவரி 15 ஆம் தேதி தேரோட்டம் மற்றும் பிப்ரவரி 16 ஆம் தேதி சக்கரஸ்நானம் நடைபெறும்.
கருட சேவை நாளில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.