ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 28.10.2026 அன்று தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
முதல் நாள் மாலை நம்பெருமாள், உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி கொடிமரம் அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்தார். அங்கு சிறப்பு அலங்காரம் கண்டு, உபய நாச்சியார்களுடன் ஊஞ்சலில் ஆடியபடியே பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதன்பின்னர் அடுத்தடுத்த நாட்களில் நம்பெருமாள் தனித்து புறப்பாடாகி ஊஞ்சல் மண்டபத்தை அடைந்து, ஊஞ்சலில் ஆடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் 6-ம் திருநாளான நேற்றும் (02.11.2026) மாலை 5.30 மணியளவில் நம்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு சிறப்பு அலங்காரம் கண்டு ஊஞ்சலில் ஆடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாளை மறுநாள் வரை ஊஞ்சல் உற்சவ விழா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர், இரவு 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார்.
அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானத்திற்கு சென்றடைகிறார். இந்நிகழ்வை முன்னிட்டு இரவு 9 மணிக்கு மேல் மூலவர் சேவை ரத்து செய்யப்படும்.