கோவில் கருவறையில் விழுந்த சூரியக்கதிர்கள் 
ஆன்மிகம்

திருவட்டார் கோவிலில் பெருமாளின் திருமேனியை தழுவிய சூரியக் கதிர்கள்.. பக்தர்கள் பரவசம்

சூரியனின் மஞ்சள் நிறக் கதிர்கள் கண்களை கூசச்செய்யும் விதத்தில் பாய்ந்து கருவறையில் பள்ளிகொண்ட பெருமாளின் திருமேனியில் விழுந்தது.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் முக்கியமானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலாகும். 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்றதுமான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பெருமாள் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

புரட்டாசி மற்றும் பங்குனி மாதத்தின் தொடக்கத்தில் மாலை நேரம் சூரியனின் மயக்கும் பொன்னிற கதிர்கள் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டு அருள்பாலிக்கும் பெருமாளின் உடலில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, பங்குனி மற்றும் புரட்டாசி மாதத்தில் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மாலையில் மறையும் சூரிய ஒளி கதிர்கள் கோவில் கருவறை வரை பாய்ந்து, உற்ச மூர்த்தி மற்றும் சயனகோலத்தில் காட்சி தரும் ஆதிகேசவப்பெருமாளின் திருமேனியை தழுவிச்செல்லும் அதிசயம் நடைபெறும்.

அவ்வகையில் பங்குனி மாதம் 5ஆம் நாளான நேற்று மாலை மறைய தொடங்கிய சூரியனின் மஞ்சள் நிறக்கதிர்கள் கண்களை கூசச்செய்யும் விதத்தில் பாய்ந்து சபா மண்டபம், உதயமார்த்தாண்ட மண்டப பகுதியைத் தாண்டி கருவறையில் பள்ளிகொண்ட பெருமாளின் திருமேனியில் விழுந்தது. இதை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.

இந்த அபூர்வ காட்சியை இன்றும் (வெள்ளிக்கிழமை), மாலை 6 மணி அளவில் காணலாம். இந்த காட்சியை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிருக்கு வருகை தருகின்றனர்.