கன்னியாகுமரி,
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கடற்கரையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடாஜலபதி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பு விழா இன்று கொண்டாடப்பட்டது
இதையொட்டி இன்று அதிகாலையில் சுப்ரபாத சேவையும் அதைத் தொடர்ந்து வெங்கடாஜலபதிக்கு பூலங்கி சேவை, விசேஷ பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அர்ச்சகர்கள் பஞ்சாங்கம் வாசித்தனர்.
அதன் பின்னர் சுவாமிக்கு படைப்பதற்கான பூஜை பொருட்களை கோவில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் தலையில் சுமந்துகொண்டு மேளதாளம் முழங்க கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக வந்தனர்.
அந்த பூஜை பொருட்களை வெங்கடாஜலபதி முன்பு படைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. கோவிலில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, கருட பகவான், பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மாலை 5 மணிக்கு தோமாலை சேவையும், இரவு 8 மணிக்கு ஏகாந்த சேவையும் அதைத் தொடர்ந்து பெருமாள் பள்ளியறை எழுந்து எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.