மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை வசந்த உற்சவம்.. 23-ந் தேதி தொடங்குகிறது

விழா நாட்களில் தினமும் மாலையில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் தெற்கு சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பல பள்ளியில் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிப்பார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
Published on

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அந்த வரிசையில் பங்குனி மாதத்திற்கான கோடை வசந்த உற்சவம் வரும் 23-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் மாலையில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் சித்திரை வீதியில் வலம் வந்து தெற்கு சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பல பள்ளியில் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிப்பர். அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜையுடன், தீபாராதனை நடைபெறும்.

மேலும் பங்குனி உத்திரத்தன்று (ஏப்ரல் 1) சுவாமி புறப்பாடு நடக்கிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு மேல் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லூர் வைகை வட கரையில் அமைந்துள்ள திருவாப்புடையார் கோவிலில் எழுந்தருள்வார்கள். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது.

மாலை சுந்தரேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அங்கிருந்து கோவிலுக்கு வந்த பின்னர் சுவாமி சன்னதி மண்டபத்தில் பாத பிட்சாடனம் நடந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்படும்.

திருவிழா நடைபெறும் நாட்களான 23-ந் தேதியில் இருந்து ஏப்ரல் 1-ந் தேதி வரை கோவில் மற்றும் உபயதாரர்கள் சார்பில் உற்சவர் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமி தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் ஆகியவை எதுவும் நடத்தப்பட மாட்டாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Also Read
கவலை நீக்கும் கால பைரவர் வழிபாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com