திருமலை,
தெலுங்கு புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று சம்பிரதாயபடி 'யுகாதி ஆஸ்தானம்' நடந்தது. நேற்று காலை 6 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, விஷ்வக்சேனர் சிறப்பு அலங்காரத்தில் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை வலம் வந்து கோவிலுக்குள் சென்றனர். அங்கு உற்சவர்கள் கருடாழ்வாரை நோக்கியபடி தங்க வாசலில் அமர வைக்கப்பட்டனர்.
அதன்பிறகு மூலவருக்கும், உற்சவர்களுக்கும் அர்ச்சகர்கள் புதிய வஸ்திரம் அணிவித்தனர். அப்போது வேதப் பண்டிதர்கள் மூலவருக்கு அருகில் நின்று தெலுங்கு பஞ்சாங்கத்தை படித்தனர். ஆகம பண்டிதர்களும், பிரதான அர்ச்சகர்களும் சிறப்புப்பூஜைகளை செய்து யுகாதி ஆஸ்தானத்தை நடத்தினர்.
இதில் பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி தேவஸ்தான அதிகாரி முத்தாடா. ரவிச்சந்திரா, இணை அதிகாரி ஏ.சரத், பறக்கும்படை அதிகாரி முரளிகிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். தெலுங்கு புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தெலுங்கு புத்தாண்டையொட்டி கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு வகையான பழங்கள், காய்கள், 10 டன் எடையிலான பல வண்ணமலர்களால் தங்கக் கொடிமரம், பலி பீடம் ஆகியவற்றில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அதேபோல் கோவில் எதிரே நுழைவுவாயிலில் அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. பந்தலுக்கு மேலே மகாவிஷ்ணு, லட்சுமி தாயார் உருவமும், இருபக்கமும் பெரிய திருவடியான கருடன் உருவமும், சிறிய திருவடியான அனுமன் உருவமும் அமைக்கப்பட்டு இருந்தது. கோவில் எதிரே பக்தர்களை கவரும் வகையில் பிரமாண்ட ராமர் சிலை அமைக்கப்பட்டிருந்தது.
இதுதவிர கோவில் அருகில் உள்ள பூங்காவில் மஞ்சள் நிறத்திலான பூக்களால் யானை உருவங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஸ்ரீகிருஷ்ணர் பசு, கன்றுடன் விளையாடுவது போன்றும், ஸ்ரீகிருஷ்ணர் மாமரத்தில் காய்த்துள்ள மாங்காய்களை பறித்து சக நண்பனுக்கு கொடுப்பதுபோன்றும், கையில் புல்லாங்குழலுடன் 'வேணுகானம்' இசைப்பது போலவும் உருவங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.