ஆன்மிகம்

முருகப்பெருமானைப் போற்றும் தைப்பூசத் திருநாள்

தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு குரு பகவானின் அருளும் சேர்ந்து கிட்டும் என்பது ஐதீகம்.

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை வழிபடும் மிக முக்கியமான தினங்களில் ஒன்று தைப்பூசத் திருநாள். தை மாதத்தில் பூசம் நட்சத்திரத்தன்று பௌர்ணமி இணைந்து வரும் நாளிலோ அல்லது பௌர்ணமியை ஒட்டிய நாளிலோ தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் முருகப் பெருமானை போற்றி வழிபட்டால் பல மடங்கு நன்மைகள் பெறலாம்.

தைப்பூசத் திருநாளுக்கு பல்வேறு புராணக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமான், தேவர்களின் சேனாதிபதியாக இருந்து, அசுரர்களை அழித்து, தேவர்களை பாதுகாத்ததை போற்றும் விதமாக தைப்பூசம் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

ஞானப்பழத்திற்கான போட்டியில் விநாயகர் ஞானப் பழத்தை பெற்றுக்கொண்டதால் கோபம் கொண்ட முருகப் பெருமான், பழனி மலையில் ஆண்டி கோலத்தில் வந்து நின்ற தினமே 'தைப்பூசம்' என்றும் கூறப்படுகிறது.

அன்னை பராசக்தி, பழனி மலையில் ஆண்டி கோலத்தில் நின்ற முருகனுக்கு ஞான வேல் கொடுத்த தினமே 'தைப் பூசம்' என்ற கருத்தும் உள்ளது.

முருகப்பெருமான், அகத்திய முனிவருக்கு தமிழ் கற்றுக்கொடுத்ததும், வள்ளி தேவியை மண முடித்ததும் இந்த தைப்பூச நாளில் தான் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு பல ஆன்மிக சிறப்புகளை கொண்ட தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தைப்பூச கொண்டாட்டம்

இந்த ஆண்டு தைப்பூசத் திருநாள், தை மாதம் 18-ந் தேதி (1-2-2026) ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

தைப்பூசத் நாளில் முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதிலும் குறிப்பாக, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

அறுபடை வீடுகளிலும் பழனியில் தான் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய வேண்டுதல்களில் காவடி எடுப்பதும் ஒன்றாகும். இந்த காவடி எடுக்கும் முறை தோன்றிய தலமாக பழனி உள்ளது. பழனியில் தைப்பூச விழா 10 நாள் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள், விரதம் இருந்து பச்சை உடை தரித்து பாத யாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.

விரதம் இருக்கும் முறை

தைப்பூச நாளில் அதிகாலையில் எழுந்து, வீட்டை சுத்தம் செய்து நீராடிவிட்டு, திருநீறு அணிந்து விரதத்தை தொடங்கலாம். பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைத்து, மலர்களால் அலங்கரித்து விளக்கேற்றி வழிபடலாம். கந்தசஷ்டி கவசம், திருமுருகாற்றுப் படை, திருப்புகழ் போன்ற முருகப் பெருமானுக்கு உகந்த பாடல்களை பாட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் 'ஓம் சரவணபவ' எனும் ஆறெழுத்து திருமந்திரத்தை உச்சரித்தபடியே இருப்பது நல்லது.

காலை மற்றும் மதியம் இரு வேளைகளிலும் உணவு உண்ணாமல், பால், பழம் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்வது சிறப்பு. முருகப்பெருமானை மனதார நினைத்து, அவன் அருள் வேண்டி விரதம் இருக்க வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

Also read:பழனி தைப்பூச விழா: என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..? கோவில் நிர்வாகம் விளக்கம்

காவடி

தைப்பூச விரதத்தை 48 நாட்கள், 21 நாட்கள் அல்லது தைப்பூச தினத்தன்று மட்டும் என அவரவர் விருப்பத்திற்கேற்பவும், உடல்நிலைக்கு ஏற்பவும் மேற்கொள்ளலாம். சிலர், காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும், அலகு குத்தியும், பாத யாத்திரையாக சென்றும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

தீராத நோயால் அவதிபடுபவர்கள், முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்படி நோய் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெற்றதும் தைப்பூசத்தன்று காவடி எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

Also read:தைப்பூச திருவிழா... தோரணமலை முருகன் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம்

தொட்டது துலங்கும்

27 நட்சத்திரங்களில், பூசம் நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பவர், குரு பகவான். எனவே, தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு குரு பகவானின் அருளும் சேர்ந்து கிட்டும்.

தைப்பூச நாளில் தொட்டது துலங்கும் என்பார்கள்.

எனவே அன்றைய தினம், குழந்தைகளுக்கு காது குத்துதல், ஏடு தொடங்குதல், திருமணப் பேச்சுக்கள், புதிய தொழில் ஒப்பந்தம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். தைப்பூசத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கும், தீராத பகை மாறும், ஒற்றுமை அதிகரிக்கும், தொடங்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தியாவில் வருமான வரி விதிப்பு முறை எப்போது அமலுக்கு வந்தது தெரியுமா?

Budget 2026 Live Updates... மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் 2026: தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன..?

‘தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை’ - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மாநிலங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி நிதி: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..?