ஸ்ரீநடராஜர் வெள்ளை சாத்தி பவனி 
ஆன்மிகம்

செங்கோட்டையில் தைப்பூச விழா... நடராஜர் வெள்ளை சாத்தி பவனி

செங்கோட்டையில் நடைபெறும் தைப்பூச விழாவில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

செங்கோட்டையில் தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடெபறுகிறது.

காலை, மாலை, இரவு வேளையில் சுவாமி, அம்பாள் வாகனத்தில் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் திருவீதி உலா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளை மண்டகப்படிதாரர்கள் நிகழ்த்தி வருகின்றனர். இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்கின்றனர்.

7ம் திருநாளன்று காலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் பல்லக்கில் சுவாமி அம்பாள் வீதி உலா காட்சி நடைபெற்றது. அந்தி வேளையில் கோரதத்தில் முக்கிய ரத வீதிகளில் சுவாமி அம்பாள் பவனி வந்து அருள்பாலித்தனர். கோரதத்தை பக்தர்கள் பக்தியுடன் வடம்பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இரவு 10.30 மணியளவில் சுவாமி, அம்பாள் பல்லக்கில் பவனி வருதல், ஸ்ரீநடராஜர் வெள்ளை சாத்தி சப்பரத்தில் பவனிவருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.