தலைமை பூசாரி குண்டம் இறங்கிய காட்சி 
ஆன்மிகம்

தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

தலைமை பூசாரி சிவண்ணா, உற்சவர் மாரியம்மனை தலையில் சுமந்தபடி குண்டத்தில் இறங்கினார்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள மலை கிராமம் தாளவாடி. இங்கு பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் (10-ம் தேதி) தொடங்கியது.

நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு மலர் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. தாளவாடி மாரியம்மனுடன் கும்டாபுரம் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு அம்மன் அலங்கார வீதி உலா தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவர் எழுந்தருளி, தாளவாடியில் உள்ள அனைத்து வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரவு குண்டம் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. குண்டத்தில் போடப்பட்ட விறகுகள் முழுமையாக எரிந்து இன்று அதிகாலையில் குண்டம் தயார் ஆனது. அதிகாலை கோவில் இருந்து மேள தாளங்கள் முழங்க உற்சவர் அம்மனை ஆற்றில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலின் தலைமை பூசாரி சிவண்ணா, அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மனை தலையில் சுமந்து அழைத்து வந்தார். அவருடன் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர். வழிநெடுக பக்தர்கள் அம்மனை வரவேற்று வணங்கினர்.

இநத ஊர்வலம் கோவில் வளாகத்தை அடைந்ததும், மேள தாளங்கள் ஒலிக்க தலைமை பூசாரி சிவண்ணா, உற்சவர் மாரியம்மனை தலையில் சுமந்தபடியே குண்டத்தில் இறங்கினார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்தி கோஷங்கள் எழுப்பினர். குண்டத்தில் இறங்கிய தலைமை பூசாரி, கோவில் கருவறைக்கு சென்றார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

விழாவில் தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இந்த பிரம்மாண்டமான குண்டம் திருவிழாவில் கோவிலின் பூசாரி மட்டுமே தீ மிதித்தார். வேறு யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை. பூசாரி குண்டம் இறங்கியபின், கூடியிருந்த பக்தர்கள் கையில் இருந்த பூமாலை, வேப்பிலை, உப்பு, சாம்பிராணி ஆகியவற்றை குண்டத்தில் வீசி வழிபட்டனர்.

Also read:திருப்புகழ் தந்த திருமுருகன்... வயலூர் ஆலயத்தின் சிறப்பு