நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் நடைபெற்ற தேரோட்டம் 
ஆன்மிகம்

நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம்

ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரியமாணிக்க பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நெல்லை,

நெல்லை டவுனில் பழமைவாய்ந்த கரிய மாணிக்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு பங்குனி பிரமோற்சவ விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் பல்வேறு பூஜைகள், சிறப்பு வழிபாடு, திருமஞ்சனம், வீதிஉலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான நேற்று காலை நடைபெற்றது. அதிகாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிய மாணிக்க பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளியதும், தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் 4 ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.

இன்று (புதன்கிழமை) குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலையில் சுவாமி, தாயார்கள் பல்லக்கு வீதிஉலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.