நென்மேலி அபிமுக்தீஸ்வரர் கோவில்

அபிமுக்தீஸ்வரர் ஆலய உற்சவமூர்த்தியை வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபட்டால் விரையில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
நென்மேலி அபிமுக்தீஸ்வரர் கோவில்
நென்மேலி அபிமுக்தீஸ்வரர் கோவில்
Published on

செங்கல்பட்டு மாவட்டம் நென்மேலி கிராமத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்து ஈசன், தன்னை வழிபடுவோருக்கு முக்தி அளித்து அருள்வதாக ஐதீகம். மேலும், இங்கு உற்சவராக இருக்கும் சிவன் - பார்வதி, திருமணக் கோலத்தில் காட்சி அளிப்பதால் திருமணத் தடைகளை நீக்கும் அற்புத தலமாகவும் இக்கோவில் போற்றப்படுகிறது.

நென்மேலி அபிமுக்தீஸ்வரர் ஆலயம், சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. கோவில் கருவறையில் உள்ள இரண்டு கல்வெட்டுகளின் மூலம் இந்த ஆலயமானது, கி.பி.12-ம் நூற்றாண்டு முதல் வழிபாட்டில் இருந்து வருவதாகவும், சோழ மன்னரான விக்கிரம சோழன் மற்றும் பாண்டிய மன்னரான மாறவர்மன் விக்கிரம பாண்டியன் ஆட்சிக்காலத்தில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெற்று வந்ததையும் அறிய முடிகிறது.

கி.பி.12-ம் நூற்றாண்டிற்கு முன்னர் இத்தலத்து ஈசன் இப்பகுதியில் உள்ள ஒரு மலைமீது இருந்ததாகவும், பின்னர் அவரை தற்போது உள்ள பகுதியில் பிரதிஷ்டை செய்து கோவில் அமைத்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.

இத்தலம் நென்மேலியில் ஈசான்ய மூலையில், அதாவது வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கருவறையில் மூலவரான சிவபெருமான், லிங்க ரூபமாய் நாகாபரணத்துடன் கிழக்கு திசை நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இத்தலத்து ஈசன், மயானத்தை நோக்கியபடி வீற்றிருக்கிறார். இதன் காரணமாக தன்னை வழிபடும் பக்தர்கள் அனைவருக்கும் இவர் முக்தி அளித்து அருள்வதாகக் கூறப்படுகிறது. அருகில் ஒரு சிறு சன்னிதியில் திரிபுரசுந்தரி அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

கருவறைக்கு வெளிப்புறத்தில் பலிபீடம் அமைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக நந்தியம்பெருமான் காட்சி தருகிறார். கோட்டங்களில் வரசித்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய தெய்வங்கள் காட்சி தருகின்றனர். அருகில் சண்டிகேஸ்வரர் ஒரு தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். கோவில் திருச்சுற்றில் கற்பக விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.

Also Read
பூமி தோஷங்கள் போக்கும் பரிகார தலம்
நென்மேலி அபிமுக்தீஸ்வரர் கோவில்

இத்தலத்தில் உற்சவமூர்த்தி கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார். மணக்கோலத்தில் சிவபெருமானின் வலதுபக்கத்தில் பார்வதிதேவி எழுந்தருளியுள்ள காட்சியை தரிசிப்பது மிகவும் அரிதானதாகும். இத்தலம் வந்து உற்சவமூர்த்தியை வில்வ இலைகளால் அர்ச்சித்து மூன்று முறை நமஸ்காரம் செய்துகொண்டால் வெகுவிரையில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இத்தலம் ராகு கேது பரிகார தலமாகவும் விளங்குகிறது.

சிவ தலங்களுக்கே உரிய பல உற்சவங்கள் இத்தலத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மகாசிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஐப்பசியில் அன்னாபிஷேகம், பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம், மாதப்பிரதோஷங்கள் முதலான உற்சவங்கள் இத்தலத்தில் வெகுவிமரிசையாக நடைபெறுகின்றன. இந்த ஆலயத்தில் தினமும் ஒருகால பூஜை நடைபெறுகிறது.

இக்கோவில், தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்து வைக்கப் பட்டிருக்கும்.

அமைவிடம்

செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் நென்மேலி அபிமுக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. செங்கல்பட்டில் இருந்து கல்பாக்கம் மற்றும் மாமல்லபுரம் செல்லும் பேருந்துகள் நென்மேலி பேருந்து நிறுத்தத்தில் நிற்கும். அங்கிருந்து அரை கிலோமீட்டர் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.

Also Read
பேச்சு குறைபாட்டை நீக்கும் முருகப்பெருமான்
நென்மேலி அபிமுக்தீஸ்வரர் கோவில்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com