அழகர்கோவில்,
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா வருகிற 29-ந்தேதி காலையில் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
அன்று மாலையில் உற்சவர் ஸ்ரீதேவி. பூதேவியர்களுடன் கள்ளழகர் பெருமாள், சகல பரிவாரங்களுடன் புறப்பாடாகி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு பட்டர்களின் வேத மந்திரங்களுடன் விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். தொடர்ந்து அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி சென்று இரவு கோவிலுக்குள் இருப்பிடம் சேருகிறார். தொடர்ந்து 30, 31-ந்தேதிகளில் மாலையில் சுவாமி அதே மண்டபத்தில் எழுந்தருள்வார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந்தேதி அன்று காலை திருக்கல்யாண வைபவம் மங்கள இசையோடு, பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல் 9.20 மணிக்குள் பெரியாழ்வார் முன்னிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் ஒரே நேரத்தில் கள்ளழகர் பெருமாள் ஒரே மேடையில் மணக்கிறார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்ய உள்ளனர்.
மறுநாள் 2-ந்தேதி மஞ்சள் நீர் சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஹரிஹரன் கண்காணிப்பாளர்கள், உள்துறை, மக்கள் தொடர்பு அலுவலர், மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.