பங்குனித் திருவிழா கொடியேற்றம் 
ஆன்மிகம்

திருப்புளிங்குடி பெருமாள் கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

திருவிழா காலங்களில் தினசரி காலையில் மாடவீதி புறப்பாடும், மாலையில் வாகன சேவையும் நடைபெறும்.

ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் மூன்றாவது திருப்பதியாக விளங்கும் திருப்புளிங்குடி காய்சினி வேந்தப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

7 மணிக்கு நித்தியல், 9 மணிக்கு கொடிப்பட்டம் மாடவீதியை சுற்றி வந்தது. தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு காலை 9.45 மணிக்கு கொடிமரத்தில் அர்ச்சகர் ரமேஷ் கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள், நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா காலங்களில் தினசரி காலையில் மாடவீதி புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு வாகன சேவை நடைபெறுகிறது. இந்திர விமானம், அனுமன், சிங்கம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாடவீதி மற்றும் ரதவீதிகளில் பகவான் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

மார்ச் 16 ஆம் தேதி 5ஆம் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான், நத்தம் எம்இடர்கடிவான் ஆகியோருடன் காசினிவேந்த பெருமாள் எழுந்தருளி மூன்று பெருமாள்களும் கருடவாகத்தில் காட்சி அளிப்பார்கள். மார்ச் 20ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 21ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறும்.