மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருப்புங்கூர் கிராமத்தில் சௌந்தரநாயகி சமேத சிவலோகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோவிலில் நந்தனாருக்காக நந்தி வழி விலகி சிவபெருமான் காட்சி தந்த தலமாக திகழ்கிறது. இத்தலம் காரிய தடை நிவர்த்தி ஸ்தலமாகவும் விளங்குகிறது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவில் நிர்வாகம், தருமபுரம் ஆதீனம், சென்னை மகாலட்சுமி சுப்பிரமணியன் அறக்கட்டளை, கோவை அரண் பணி அறக்கட்டளை ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி பூர்வாங்க பூஜையும், 27ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. இன்று காலை 6ம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர், காலை 8 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம்புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் குடங்களுடன் கோவிலை வலம் வந்து ராஜகோபுரம், சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி விமானங்களை அடைந்தனர்.
அதன்பின்னர் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் மங்கள வாத்தியங்கள் இசைக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி, புனித நீரை ஊற்றி ஏக காலத்தில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.