கோப்புப்படம் 
ஆன்மிகம்

பூலோக கைலாசத்தில் நாளை மகா தீபம்: பக்தர்கள் வெள்ளத்தில் விழாக்கோலம் பூண்டுள்ள திருவண்ணாமலை

இன்று (திங்கட்கிழமை) இரவு 11.42 மணிக்கு பவுர்ணமி தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 8.23 மணிக்கு நிறைவடைகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது.

பவுர்ணமி மற்றும் மகா தீபத்தன்று பல லட்சம் பக்தர்கள் இந்த மலையை சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டு மகா தீபத்தன்று 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அர்த்தநாரீஸ்வரர்

நாளை மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே வந்து ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பக்தர்களுக்கு காட்சி தருவார்.

மகாதீபம்

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மகா தீபம் ஏற்றியதும் கிரிவலப்பாதையில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணக்குவார்கள்.தொடர்ந்து மகாதீபம் மற்றும் இதர நாட்களில் பக்தர்கள் மலை ஏற தடை செய்யப்பட்டுள்ளது.

பவுர்ணமி கிரிவலம்

வழக்கமாக தீபத்தன்று அல்லது தீபத்திற்கு மறுநாள் பவுர்ணமி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தீபத்திற்கு முந்தைய நாளான இன்று (திங்கட்கிழமை) இரவு 11.42 மணிக்கு பவுர்ணமி தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 8.23 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் இன்று மாலையில் இருந்தே திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.

விழாக்கோலம்

பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

மகா தீபத்தை முன்னிட்டு. திருவண்ணாமலை நகரம் மற்றும் மாடவீதிகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்து வருகிறது. பெரும்பாலான பக்தர்கள் கிரிவலம் சென்றபடி உள்ளனர். இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதனிடையே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் 217 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்திற்கு மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT