திருச்செந்தூர்,
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலையில் ஒவ்வொரு வாகனத்திலும் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.
5-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது.
இரவு 7.15 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர் பிரதான வாயில் திறக்கப்பட்டு, குடவருவாயில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கீழ ரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாசித் திருவிழவைக் காண பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். பலர் பாதயாத்திரையாக வந்தும், காவடி எடுத்தும் முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.
6-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) காலையில் சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தக்ளுக்கு அருள்பாலித்தார். இரவு 8 மணியளவில் சுவாமி வெள்ளித் தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள்.
7-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரானையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமி சண்முகர் உருகுசட்ட சேவை நடக்கிறது. பின்னர் 9 மணியளவில் சுவாமி வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருள்கிறார். மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
8-ம் திருநாள் (சனிக்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், பகல் 10.30 மணிக்கு சுவாமி பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.