திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் தெப்போற்சவம் கடந்த 26-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி திருக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். அதன்பின்னர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
தெப்ப உற்சவத்தின் முதல் நாளில் கோதண்டராம சுவாமியும், இரண்டாம் நாளில் ருக்மணி சத்யபாமா சமேத பார்த்தசாரதியும் தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
மூன்றாம் நாளான நேற்று (28-ம் தேதி) ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு தெய்வீக தரிசனம் அளித்து அருள்பாலித்தார். மாலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தெப்ப உற்சவ நிகழ்வில் திருமலையின் பெரிய ஜீயர் மற்றும் சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.