தேரோட்டம் 
ஆன்மிகம்

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

தேரோட்டம் முடிந்தபின் பிரபந்தம் மற்றும் வேத சாற்றுமுறை நடைபெற்றது.

திருப்பதி,

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. 8.30 மணியளவில், சீதா, லட்சுமணர் சமேத கோதண்டராமர் தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்தார்.

தேருக்கு முன்பு வாத்தியங்கள், பஜனை குழுக்கள், கோலாட்டம் ஆகியவற்றுடன் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர் இழுத்தனர். வழி நெடுகிலும் கற்பூர ஆராதனைகள் நடைபெற்றன.

தேரோட்டம் முடிந்து திரும்பியபின், பிரபந்தம் மற்றும் வேத சாற்றுமுறை நடைபெற்றது. மதியம் 3 மணி முதல் மாலை 4 மணி வரை அர்ச்சகர்கள் திருமஞ்சனம் மற்றும் ஆஸ்தானம் நடத்தினர். இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது.

நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், தேவஸ்தன வாரிய உறுப்பினர் ஜி.பானுபிரகாஷ் ரெட்டி, கோவில் துணை அதிகாரி நாகரத்னா, கண்காணிப்பாளர் முனிசங்கர், ஆய்வாளர் சுரேஷ், பொறியியல் துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) காலை கபில தீர்த்தத்தில் சக்கரஸ்நானம் நடைபெற்றது.