மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும், பௌர்ணமியும் இணைந்து வரும் நாளில் மாசி மகம் கொண்டாடப்படுகிறது. கோவில்களில் மட்டுமல்ல, நீர் நிலைகளிலும் பக்தர்கள் விழா எடுத்து கொண்டாடும் பண்டிகையாக மாசி மகம் கருதப்படுகிறது. அவ்வகையில் இந்த அண்டு நாளை மாசி மகம் கொண்டாடப்படுகிறது. நாளை காலை 8.17 மணிக்கு தொடங்கி, மறுநாள் 3-ந்தேதி காலை 8.07 மணி வரை மகம் நட்சத்திரம் உள்ளது. ஆனால் நாளை மாலை 6.29 மணிக்கு தான் பௌர்ணமி தொடங்குகிறது. 3-ந்தேதி மாலை 5.52 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது. மகம் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நாளை மாசி மகம் கொண்டாடப்படுகிறது.
மாசி மகத்தன்று நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள், கடற்கரைகள் என அனைத்து நீர் நிலைகளிலும் தெய்வீக சக்தி அதிகரித்து காணப்படும் நாள் மாசி மகம் ஆகும். இந்த நாளில் பெரும்பாலான கோவில்களில் தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்படும்.
கும்பகோணம் மகாமகம் குளத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சிந்து உள்ளிட்ட புண்ணிய நதிகள் எழுந்தருளுகின்றன என்று நம்பப்படுகிறது. இதனால் மாசி மகத்தன்று மகாமகம் குளத்தில் நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும் என்றும், முன்பிறவிப் பாவங்கள் நீங்கும் என்றும் சொல்கிறார்கள். இதனால் தான் மாசி மகம் 'கடலாடும் நாள்', 'தீர்த்தமாடும் நாள்' என அழைக்கப்படுகிறது.
நீர் நிலைகளில் தெய்வீக தன்மை அதிகம் உள்ளதால் தெய்வங்களே தங்களின் ஆற்றலை புதுப்பிக்கும் நாளாகவும் இந்த நாள் கருதப்படுகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் பக்தர்களை ஆசீர்வாதம் செய்வதற்காக பூமிக்கு வரும் நாளாக மாசி மகம் கருதப்படுகிறது. இதனால் இந்த நாளில் புதிய விஷயங்கள் தொடங்குதல், தர்ம காரியங்கள் செய்வது, விழா எடுத்து கொண்டாடுவது என எதை செய்தாலும் அது தெய்வீக அருளால் பல மடங்கு அதிக பலனை தரும் என்பது நம்பிக்கை.
பார்வதி தேவி 'தாட்சாயிணி' என தட்சனின் மகளாக அவதரித்ததும் மாசி மகம் அன்று எனப்படுகிறது. அதனால் இந்த நாளில் அம்பிகைக்கு குங்குமம், சரஸ்வதி தேவிக்கு வாசனை மலர்கள் ஆகியவற்றை படைத்து வழிபட்டால் மகிழ்ச்சி, வெற்றி, ஞானம் ஆகியவை பெருகும் என்கின்றனர் ஆன்மீக பெரியவர்கள்.
அதேபோல் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்ததும் மாசி மகத் தினத்தில்தான் எனச் சொல்லப்படுகிறது. எனவே, மாசி மகத் தினத்தில் சிவபெருமான் வழிபாட்டுடன் அம்பாள், முருகன், மகாவிஷ்ணு வழிபாடும் சிறப்பாக நடைபெறுகிறது.
மாசி மகத்தன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து புனித தீர்த்தங்களில் நீராடி சிவாலயங்களுக்கு சென்று வழிபட வேண்டும். மதியம் ஒருவேளை சாப்பிட்டு, இரவில் பால், பழம் எடுத்துக்கொள்ளலாம். அன்றைய தினம் தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாராயணம் செய்து இறை சிந்தனையில் ஈடுபடுவது சிறப்பாகும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம், குடும்ப ஒற்றுமை, சகல தோஷ நிவர்த்தியுடன் புண்ணியம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வருணனின் சாபத்தை சிவபெருமான் நீக்கி காத்ததால் மாசி மகத்தன்று நீராடி, சிவ பெருமானை வணங்கினால் அருமையான பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். மாசி மகம் அன்று நதிகளில் நீராடுவதை 'பிதுர்மகா நீராடல்' என்றும் கூறுவார்கள். மகம் நட்சத்திரத்துக்கு 'பித்ருதேவா நட்சத்திரம்' என்ற பெயரும் உண்டு. இந்தப் பித்ருதேவா தான் முன்னோர்களுக்கு ஆன்ம சாந்தியை அளிப்பவர். முன்னோர்கள் ஆத்ம சாந்தியுடன் இருந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்குமென்பது நம்பிக்கை. மற்ற தினங்களில் பித்ருக்களை வழிபடாவிட்டாலும், மாசிமகத்தின் போது நீராடி பித்ருக்களை வணங்கினால் முன்னோர்கள் ஆத்ம சாந்தி பெற்று அருள்புரிவார்கள்.