காஞ்சிபுரம்:
கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் மாசி மாதம் செவ்வாய்க்கிழமையையொட்டி வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வெண்பட்டு உடுத்தி வெள்ளிக்கவசம், திருவாபரணங்கள் சாற்றி, ரோஜாப்பூ, மல்லிகைப்பூ, மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் மேளதாளங்கள் ஒலிக்க, சிவ வாத்தியங்கள் முழங்க, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் முருகப்பெருமான் எழுந்தருளியதும் தேர் வடம்பிடிக்கப்பட்டது. உபயதாரர்கள், பக்தர்கள், அரோகரா கோஷமிட்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் வெள்ளித்தேரில் கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வெள்ளித்தேரில் எழுந்தருளி வலம் வந்த முருகப்பெருமானையும், வள்ளி தெய்வானையையும் தரிசனம் செய்தனர்.