தேரோட்டம் 
ஆன்மிகம்

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

தேரில் பராசக்தி மாரியம்மன், வெயிலுகந்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விருதுநகர்,

விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் அக்னி சட்டி மற்றும் கயிறு குத்து திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு 21 அக்னி சட்டி, 51 அக்னி சட்டி, பிள்ளைத்தொட்டில், கரும்பு தொட்டில், அலகு குத்தி ரதம் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தேரில் பராசக்தி மாரியம்மன், வெயிலுகந்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர். நாளை மஞ்சள் நீராடலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.