தர்மபுரி,
தமிழகத்தில் அதிக வனப்பகுதி உள்ள மாவட்டங்களில் ஒன்றாக தர்மபுரி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து விட்டதன் காரணமாக கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து தீ விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
இத்தகைய தீவிபத்துகள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தர்மபுரி மாவட்ட வனத்துறை மேற்கொண்டு உள்ளது. இதன்படி கடந்த காலத்தில் அதிக தீவிபத்துகள் ஏற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்த இடங்கள் அதிக தீப்பற்றும் பகுதிகள் மற்றும் மிதமான தீப்பற்றும் பகுதிகள் என 2 வகையாக பிரிக்கப்பட்டு அவற்றிற்காக வரைபடம் தயாரிக்கப்படுகிறது.
தர்மபுரி வனக்கோட்ட பகுதியில் ஏலகிரி காப்புக்காடு, பென்னாகரம் சரகம் பதனவாடி காப்புக்காடு, பாலக்கோடு சரகம் திருமல்வாடி காப்புக்காடு, ஒகேனக்கல் சரகம் குத்திராயன் காப்புக்காடு என 4 இடங்களில் தலா 5 கிலோ மீட்டர் வீதம் மொத்தம் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு தீத்தடுப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளன. 3 அடி அளவில் அமைக்கப்பட்டுள்ள தீத்தடுப்பு பாதை மூலம் வனப்பகுதியில் தீ பற்றினால் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் காப்புக்காடுகளில் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் திருமால் கூறுகையில், தர்மபுரி வனகோட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தீவிபத்துகளை தடுக்க ஏற்கனவே 20 கி.மீ. தொலைவிற்கு தீத்தடுப்பு பாதை அமைத்து உள்ளோம். மேலும் 50 கி.மீ. தொலைவிற்கு தீத்தடுப்பு பாதைகள் அமைக்கப்படும். வனப்பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அங்கு தீவிபத்து ஏற்படுவதற்கான செயல்களில் ஈடுபடாமல் அரியவகை தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்க உதவ வேண்டும் என்று தெரிவித்தார்.