வேலூர்,
மத்திய பாரதீய ஜனதா அரசின் 3 ஆண்டு சாதனைகள் மற்றும் அனைவரும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி விழா வேலூர் ரங்காபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சென்னை எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகம் நிறுவனம் சார்பில் இந்த விழா நடந்தது.
விழாவுக்கு காமராஜர் துறைமுக நிறுவன தலைவரும், மேலாண்மை இயக்குனருமான பாஸ்கராச்சார் தலைமை தாங்கினார். பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகள் குறித்த காணொலி காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. தற்போது நாடு, முழு வளர்ச்சி அடைந்துள்ளது. ஊழலற்ற ஆரோக்கியமான நிர்வாகம் நடக்கிறது.
ரூ.65 ஆயிரம் கோடி பரிவர்த்தனை
சாதாரண ஊழியரை போலவே இரவு, பகல் பாராமல் அவர் செயல்பட்டு வருகிறார். அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 125 கோடி பேர் கொண்ட மக்கள் தொகையில் 4 கோடி பேர் மட்டுமே வங்கி கணக்கு வைத்திருந்தனர். இதையடுத்து சாமானிய மக்கள் அனைவரும் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று திட்டத்தை அவர் அறிவித்தார். அதைதொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 29 கோடி பேர் வங்கியில் கணக்கு தொடங்கி உள்ளனர். இதன் மூலம் ரூ.65 ஆயிரம் கோடி பண பரிவர்த்தனை நடந்துள்ளது.உலகில் அதிக விபத்துகள் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் விபத்துகள் ஏற்படுகிறது. இதில் 1 லட்சம் பேர் வரை இறக்கின்றனர். இவர்களின் குடும்ப நலனுக்காக விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
கியாஸ் மானியம்
நாடு முழுவதும் 17 கோடி பேர் விபத்து காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் 65 லட்சத்து 857 பேர் சேர்ந்துள்ளனர்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று 1 கோடியே 10 லட்சம் பேர் கியாஸ் மானியத்தை விட்டு கொடுத்துள்ளனர். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருதற்கு முன்பு துறைமுகங்கள் அனைத்தும் நஷ்டத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது அனைத்து துறைமுகங்களும் லாபத்தை ஈட்டி வருகின்றன.
காமராஜர் துறைமுகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் 1 மில்லியன் டன் பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது 90 மில்லியன் டன் வரை ஏற்றுமதி இறக்குமதி நடக்கிறது. இந்த துறைமுக கழகம் மூலம் ரூ.450 கோடி லாபம் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
குளச்சல்
இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குளச்சல் துறைமுகம் அமைக்க ஆய்வுகள் நடந்து வருகிறது. சிலர் இதற்கு இடையூறுகள் ஏற்படுத்தி வருகின்றனர். இடையூறுகள் தகர்க்கப்பட்டு துறைமுகம் உறுதியாக அமைக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் தி.மு.க. சரிவை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் இவ்வளவு அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தி.மு.க.வில் யாரும் சேரவில்லை. அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடித்தால், தி.மு.க. காணாமல் போய் விடும்.இந்திராகாந்தி காலத்தில் 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைக் கக்கூடாது என்று தலையில் அடித்துக்கொண்ட தி.மு.க. இப்போது அந்த பிரிவை பயன்படுத்தி அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க கோருவது ஏன்?
நீடிக்க வேண்டும்
பா.ஜ.க.வை பொறுத்தவரை ஆட்சி கலைப்பில் விருப்பம் இல்லை. அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க வேண்டும். காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போன்று தற்போதைய முதல்- அமைச்சர்கள் வேகமாகவும், துணிச்சலாகவும் செயல்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் போது தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் பா.ஜ.க.வால் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.